திரை விமர்சனம்

ஹைக்கூ – விமர்சனம்

பெண்கள் கழிவறைக்குள் தெரியாமல் நுழைந்துவிடும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மனோவைக் கல்லூரியை விட்டு நீக்குகின்றனர். அதனால் இறுதியாண்டு படிக்க வேற கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இருபாலர் படிக்கும் கல்லூரியாக மாற்றம் பெறும் பெண்கள் கல்லூரியில், ஒரே ஒரு ஆண் மாணவனாகச் சேருகிறான் மனோ. கோவையிலுள்ள அக்கல்லூரியில், கொடி எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறுகிறது. ஆனால், ஓவர் பொசஸிவாக இருக்கும் மனோவின் குணத்தால், அந்தக் காதல் முறிகிறது.

கல்லூரி முடிந்து, மனோ சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறான். அந்நிறுவனத்தில் சேரும் நிவி எனும் நிவேதாவுடன் மெல்ல காதல் மலருகிறது. நிவேதாவின் முன்னாள் காதலில், காதலனின் டாக்ஸிக்கான குணத்தால் பாதிக்கப்பட்டிருப்பார். மனோவோ, முந்தைய காதலில் தான் செய்த தவற்றை மீண்டும் செய்யக் கூடாது என மெச்சூர்டாக மாறத் தொடங்கியிருப்பார். எனினும் அவர்களது காதலில் ஒரு நிச்சயமற்றத்தன்மை நிலவிக் கொண்டே இருக்கிறது. அவர்கள்தல் என்னவாகிறது என்பதே படத்தின் கதை.

அதிர்ச்சி அருண் பேசும் வசனங்கள் கலகலப்பிற்கு உதவியுள்ளன. கொடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி, நாயகன் ஏகனுடனான கெமிஸ்ட்ரியால் படத்தில் யூத்ஃபுல்லான தருணங்களை உருவாக்க உதவியுள்ளார். நிவேதாவாக நடித்துள்ள ஃபெமினா ஜார்ஜ், கதைக்கு ஒரு எமோஷ்னல் வடிவத்தை அளித்துள்ளார். காதலை அழகாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தும் சித்து குமாரின் இசையும்; கோவை, சென்னை என இரண்டு நகரங்களுக்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

காதல் தோல்வியைக் காவியமாக்கி ஊதிப் பெருசாக்கும் சினிமாக்கள் மத்தியில், கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள, முன்னர் செய்த தவறுகளைச் செய்யாமல் இருக்க நினைக்கும் நாயகம் தமிழுக்கு நிச்சயம் புதுசே! கோழிப்பண்ணை செல்லதுரை படத்தில் நாயகனாக அறிமுகமான ஏகன், அப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும் தோற்றத்திலும் தோன்றியுள்ளார். கோவையில் மாணவனாக இருக்கும் பொழுது ஓர் உடல்மொழி, சென்னை வாசத்தில் ஓர் உடல்மொழி என நடிப்பில் அசத்தியுள்ளார்.

காதல் தோல்வி என்பது நிரந்தரம் இல்லை. அத்தோல்வியில் இருந்து நாம் பெறும் பாடம் என்ன என்பதே முக்கியம் என்றும்; வாழ்க்கை, அடுத்த வாய்ப்பை நிச்சயம் வழங்கும் என்றும் அழுத்தமாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் யுவராஜ் சின்னச்சாமி. காதலில் தோற்பதே உண்மையான காதலைப் புரிந்து கொள்ள வழி வகுக்கும் என்ற பாசிடிவான மெஸ்ஸெஜைச் சொல்லி அழகான காதல் திரைக்கவிதையாக ஈர்க்கிறது ‘ஹைக்கூ’.