சட்டமும் நீதியும் 2 – விமர்சனம்
இன்ஸ்பெக்டர் கனகவேல் தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல்துறை ரிப்போர்ட் அளிக்க, அது தற்கொலை அல்ல கொலை என்று வழக்கு தொடுக்கிறார் கனகவேலின் மனைவி சந்திரா. கனகவேலுடன் ஸ்டேஷனில் பணி புரியும் நான்கு காவலர்கள் மேல் புகார் அளிக்கிறார் சந்திரா. குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் வாதாடக் கூடாதென பார் கவுன்சிலில் தீர்மானம் எட்டப்படுகிறது. ஏனென்றால் சந்திரா தான் பார் கவுன்சிலரின் தலைவர்.
குற்றவாளிக்குக் கூட வக்கீல் வைத்துக் கொள்ளும் உரிமையைச் சட்டம் அளித்து இருக்கும் பொழுது, ஒரு நிரபராதிக்காக வாதாட யாரையும் அனுமதிக்காதது எந்த வகையில் நியாயமாகும் என இப்ராஹிமின் மனைவி பானு, வக்கீல் சுந்தரபாண்டியனைக் கேட்கிறார். அக்கேள்வியின் கனம் உலுக்க, சுந்தரபாண்டியன் பார் கவுன்சிலை எதிர்த்து அவ்வழக்கை எடுத்துக் கொள்கிறார்.
சந்திரா, சி.பி.ஐ. விசாரணை கோர, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அக்குழு, குற்றம் சாட்டப்பட்ட நால்வரும்தான் குற்றவாளிகள் என அறிக்கை சமர்ப்பிக்கிறது. அவ்வறிக்கை மேலோட்டமாக்ச் விசாரித்துத் தரப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் சாமர்தியமாக நிரூபிக்கிறார் சுந்தரபாண்டியன்.
சுந்தரபாண்டியனாகச் சரவணன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். கணவனை இழந்த சந்திராவாக வரலட்சுமி சரத்குமாரும் தனது பாத்திரத்தில் மிக நிறைவாக நடித்துள்ளார். இன்ஸ்பெக்டர் கனகவேலாக பிரேம் குமாரும், அவருடன் ஸ்டேஷனில் பணி புரியும் சக காவல்துறை அதிகாரிகளாகக் கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத் முதலியோர் நடித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரிகளுக்குள் ஏன் கருத்து மோதல் ஏற்படுகிறது என்பதையும், SIT சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளைச் சுந்தரமூர்த்தி சுட்டிக் காட்டும் காட்சியையும் மிக அழகாக எழுதியுள்ளார் இயக்குநர் பாலாஜி செல்வராஜ். “எல்லா வெற்றியும் மகிழ்ச்சியைத் தருவதில்லை” எனும் சுந்தரபாண்டியனுடன் சந்திராவும் கைகோர்க்கும் இடம் சிலிர்ப்பாக உள்ளது. எதிரும் புதிருமாகச் சுந்தரபாண்டியனும் சந்திராவும் மோதிக் கொண்டாலும், இருவருமே அறத்தின் பக்கம் நிற்பதே இந்த சீசனின் ஹைலைட். முந்தைய சீசன் போலவே, நல்ல கோர்ட் ரூம் டிராமாவாக ஈர்க்கிறது இந்த இரண்டாவது சீசனும்.
