HOPE (ஹோப்) – விமர்சனம்
ஹோப் என்ற கொரியன் படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
பதினைந்து அடி உயரமுள்ள வினோதமான மிருகம் ஒன்று, ஹோப் ஹார்பர் எனும் கிராமத்தைக் கன்னாபின்னாவெனச் சிதிலமடையச் செய்கிறது. அந்தக் கிராமத்து மனிதர்களை மிதித்தும், அறைந்தும், வீசி எறிந்து கொன்றும், அவர்கள் மீது கையில் கிடைக்கும் டூ-வீலர், கார் முதலிய கனமான பொருட்களைத் தூக்கிப் போட்டும் வெறித்தனமாகக் கொல்கிறது. துப்பாக்கிக் குண்டுகளால் சராமரியாகச் சுட்டாலும், அதன் வலு குன்றாமல் மேலும் வீரியமாகத் தாக்கத் தொடங்குகிறது அம்மிருகம். அந்தக் கிராமத்தின் தலைமை போலீஸ் அதிகாரியும், அவரது பெண் அசிஸ்டென்ட்டும் மிகவும் போராடி அம்மிருகத்தைத் துரத்திக் கொல்கின்றனர்.
காட்டுக்குள் செல்லும் வேட்டையர்கள், காட்டுக்கு நடுவில் வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலத்தைக் காண்கின்றனர். அப்பொழுது, ஐடோவர் எனும் வேற்றுக்கிரகவாசியையும், அவர்களது மகாராணியான ஜாவூரையும் காண்கின்றனர். பதற்றத்தில் வேட்டையர்கள் வேற்றுக்கிரகவாசியைச் சுட, மாவேயோ எனும் வேற்றுக்கிரகத்துப் போர் வீரன், அவ்வேட்டையர் குழுவின் தலைவரைத் தவிர்த்து அனைவரையும் கொல்கிறான். போலீஸ் அதிகாரியும், அவரது பெண் அசிஸ்டென்ட்டும், வேட்டையர் குழுவை மீட்கக் காட்டுக்கு வருகின்றனர். ஆனால், வேற்றுக்கிரகவாசிகளின் கைகள் ஓங்கி, வேட்டையர் தலைவனையும், போலீஸ் அதிகாரிகாரிகளையும் வெறி கொண்டு துரத்துகின்றான் மிகவும் பலசாலியான மாவேயோ. நாயகனின் குழு எப்படித் தப்பிக்கிறது என்பதே படத்தின் கதை.
படத்தைத் தமிழ் டப்பிங்கில் பார்க்க மிகக் காமெடியாக உள்ளது. வசனங்களாலும், வசன உச்சரிப்புகளாலும் முதல் பாதி ஜாலியாகப் போகிறது. கடைசி வரையிலுமே ஒரு ஜாலியான ரிதமைப் படம் மெயின்டெயின் செய்கிறது. மிக சீரியஸான் காட்சிகளைக் கூட சட்டென காமெடியாக்கி விடுகின்றனர். இந்தப் படம் வெறும் மிருக வேட்டை எனும் தளத்தில் மட்டும் நிற்காமல், இரண்டாம் பாதியில் மிக எமோஷ்னலாகப் பயணிக்கிறது. முதற்பாதியில், ஊரையே நிர்மூலமாக்கும் மிருகத்தின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கும் நாயகன் அதன் கண்ணீரைக் காண்கின்றான். ஒரு கணம், ஊரையே அழிக்கும் அம்மிருகத்தைச் சுடுவதற்குத் தயங்குகின்றான். அந்தக் கண்ணீருக்கான காரணத்தை இரண்டாம் பாதியில் அறிய நேரும்போது, அம்மிருகத்தை நினைத்து வருந்தவும் செய்கிறான்.
156 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இப்படம் ஒரு நிறைவை அளித்தாலும், ஓப்பன் கிளைமேக்ஸாக முடித்து அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளனர்.
